
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - விருந்தா தினேஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்திருந்த கிரண் நவ்கிரேவும் ஆட்டமிழந்தர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தீப்தி சர்மா - தஹ்லியா மெக்ராத் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் தீப்தி சர்மா 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்வேதா செஹ்ராவத் 11 ரன்களுக்கும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்களுக்கும், உமே சேத்ரி 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் நிதானமாக விளையாடி வந்த தஹ்லியா மெக்ராத்தும் 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 109 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய சினெல்லே ஹென்றி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.