
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று (டிசம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்ததன் காரணமாக 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலமானது நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் சிம்ரன் ஷேக், ஜி கமாலினி, பிரேமா ராவத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் டியோன்ட்ரா டோட்டின் உட்பட நான்கு வீராங்கனைகள் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடந்து முடிந்த இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டதன் மூலம், இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் சென்ற வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார்.
அதேசமயம் வெஸ்ட் இண்டிஸின் டியோன்ட்ரா டாட்டினும் ரூ.1.7 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினி தனது அடிப்படை விலையை ரூ.10 லட்சமாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.