
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இதில் பெங்களூரில் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கு இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வரும் அனுபவ வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வந்த மூத்த வீரர்கள் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.