
மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவுநடைபெற்ற 2ஆவது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி. ஆடவர் கிரிக்கெட்டில் அந்நாட்டு அணி ஒருமுறை கூட உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் தற்போது மகளிர் அணி அந்த உயர்நிலையை எட்டியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேப்டவுன் நகரில் இன்று மாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி. இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. கடந்த ஒரு வருடமாகவே தென்ஆப்பிரிக்க அணி சீரான முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது. கடந்தஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையில் அரை இறுதி வரை முன்னேறிய நிலையில் தற்போது முதன்முறையாக டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.