
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 71.67 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் முதலிடத்தை தக்கவைத்தது.