
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும், அலெக்ஸ் கேரி 48 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் ஜடேஜா ஓவரில் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் எடுத்த ஸ்மித், 2ஆவது இன்னிங்ஸில் 34 ரன்களில் வெளியேறினார். இதே போன்று டிராவிஸ் ஹெட்டும் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2அவது இன்னிங்ஸில் 18 ரன்களில் வெளியேறினார்.