
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து மூன்றாம் நாளில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 5ஆவது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. இதில் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் 49 ரன்னும், சவுத்தி 30 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.