
நேற்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.
ஆஸ்திரேலியா அணியை முதலில் 76 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சரித்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் ஆட்டம் இழக்காமல் 251 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, முதல் நாள் முடிவில் 327 ரன்கள் சேர்த்து மிகப்பெரிய முன்னிலையில் சென்று விட்டார்கள்.
டிராவிஸ் ஹெட் வந்ததிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 146 பந்தில் 156 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் இவர் கடைசி நேரத்தில் வீசப்பட்ட ஷார்ட் பந்துகளுக்கு மிகவும் தடுமாறினார். இவரது பலவீனம் இதுவாக இருக்க இந்தியா இதை ஆரம்பத்திலே செய்யாமல் தவறவிட்டு இருந்தது.