
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு மீண்டும் உடைந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர் 185, மார்க்கோ யான்சன் 84* ரன்கள் எடுத்த உதவியுடன் 408 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது.
ஏனெனில் அதன் பின் 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவை 2வது இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 4 விக்கெட்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.