
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை பொறுத்தவரை நீண்ட காலமாகவே சரியான தொடக்க வீரர் இல்லாமல் தடுமாறி வந்தது. சொல்லப்போனால் முரளி விஜய், ஷிகர் தவான் பதில் யாரும் பெயர் சொல்லும் வகையில் பெரியதாக தொடக்க வீரராக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. ரோஹித் சர்மா தொடக்க வீரராக நன்றாக விளையாடினாலும் அவருக்கு துணையாக யாருமே இல்லை. அந்த இடத்தில் கில் களமிறங்கினாலும் அவரும் அந்நிய மண்ணில் பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யவில்லை.
ஒரு நாள் கிரிக்கெட்டில் கலக்கிய கில், அதே ஃபார்மை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரதிபலிக்கவில்லை. இந்த சூழலில் தான் 21 வயதான ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கினார். யாருமே எதிர்பாராத வகையில் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடிய ஜெய்ஷ்வால் 171 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் எங்கிருந்து விட்டாரோ அதிலிருந்து ஜெய்ஸ்வால் தொடங்கினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அபாரமாக எதிர்கொண்டு ரன்களை சேர்க்கும் பணியில் ஜெய்ஸ்வால் கவனம் செலுத்தினார். இதனால் 74 பந்துகளை எதிர் கொண்ட ஜெய்ஸ்வால் 57 ரன்கள் விளாசினார். ஜெய்ஸ்வாலின் இந்த இன்னிங்ஸில் 9 பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 77 என்ற அளவில் இருந்தது. எனினும் ஜெய்ஸ்வால் ஒரு கவன குறைவான ஷாட் ஆடி கேட்ச் ஆனார்.