
உள்நாட்டு டெஸ்ட் தொடரான இரானி கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த ரஞ்சி சாம்பியன் மத்திய பிரதேச அணியும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால் இரண்டு ரண்களில் வெளியேற அனுபவ வீரர் அபிமன்யு ஈஸ்வரனுடன் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை தங்களின் சிறப்பான பேட்டிங் மூலம் உருவாக்கித் தந்தார்கள். இந்தக் கூட்டணி 371 ரன்கள் பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து எதிரணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள். முதல் இன்னிங்சில் அபிமன்யு ஈஸ்வரன் 154 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இளம் வீரர் ஜெய்ஷ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 259 பந்துகளில் இரட்டை சதம் அடித்து 213 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 30 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம்.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 484 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணி 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மிடில் வரிசையில் விளையாடிய அதித் சேத் மட்டுமே 30 ரன்கள் எடுத்து குறிப்பிடும்படியாக விளையாடினார். அணி பெரிய இக்கட்டில் இருந்த பொழுது இந்த முறையும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு சரியான இலக்கை நிர்ணயிக்க அடித்தளம் இட்டார்.