
Indian Womens Cricket Team: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்திகா பாட்டியா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்வதுடன், அதன்பின் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த இந்திய மகளிர் அணியில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்லீன் தியோல் ஆகியோருடன் ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இளம் வீராங்கனைகளான ஸ்ரீ சாரணி, கிராந்தி கவுட் ஆகியோரும் இரு தொடர்களுக்குமான அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.