
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.
ரவி சாஸ்திரியின் பயிற்சியில், இந்திய அணி 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என கடைசி வரை முன்னேறி, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்புகளை இழந்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது, இங்கிலாந்து மண்ணில் வெற்றி, டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் முதலிடம், வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி என பல வெற்றிகளை பெற்று இந்திய அணி ரவி சாஸ்திரியின் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஐசிசி டிராபியை ஜெயிக்கவில்லை என்பது விமர்சனமாக இருந்தது.