
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற் ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் என டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினார். இதையடுத்து இணைந்த வெங்கடேஷ் ஐயர்- நிதீஷ் ராணா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அப்போது ஆட்டத்தின் 11ஆவது ஓவரில் பந்துவீச வந்த யுஸ்வேந்திர சஹால் தனது முதல் ஓவரிலேயே கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.