
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காக 67 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முறையே 118 மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் நடன கலைஞரும், யூடியூப் பிரபலமுமான தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். தனஸ்ரீ வர்மா, சாஹல் ஆடும் போட்டிகளை காண தவறாது சென்றுவிடுவார். இந்தியாவிற்காகவோ அல்லது ஐபிஎல்லிலோ, எந்த போட்டியில் ஆடினாலும் நேரில் சென்று சாஹலை உற்சாகப்படுத்துவார்.
இப்படியாக இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில், அண்மையில் தனஸ்ரீ வெர்மா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த சாஹல் பெயரை நீக்கிவிட்டார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. யுஸ்வேந்திர சாஹலும், புதிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருந்தார். அதனால் இருவரும் பிரியவுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளை கூற, இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது.