குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ஜாகீர் கான்!
குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Trending
முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இத்தொடரில் நிறைய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 2 மூத்த ஸ்பின்னர்கள் தேர்வாகியுள்ளதால் இளம் வீரர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குல்தீப் யாதவை விட பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் இத்தொடரில் முதன்மை ஸ்பின்னராக விளையாடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரவி பிஷ்னோய் இத்தொடரிலும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். ஏனெனில் அது உங்களுக்கு வளைவுத் தன்மையை ஏற்படுத்தும். ஒருவேளை நீங்கள் குல்தீப் யாதவை தேர்வு செய்தால் அவர் பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலும் வீச மாட்டார். எனவே ரவி பிஷ்னோயை தேர்ந்தெடுப்பது அங்கே சிறந்த சிந்தனை செயல் முறையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர் நாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார். மேலும் பவர் பிளே ஓவர்கள் முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து தருணங்களிலும் தைரியமாக பந்து வீசக்கூடிய ரவி பிஷ்னோய் சமீபத்தில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now