Zim Afro T10 : சிக்சர்களால் மிரட்டிய யூசுஃப் பதான்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஜோபர்க்!
டர்பன் களந்தர்ஸ் அணிக்கெதிரான ஜிம்பாப்வே டி10 குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜோபர்க் பஃபல்லோஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தோன்றிய டி10 கிரிக்கெட் வடிவம் டி20 கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் சென்றதோடு இல்லாமல், எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் டி10 கிரிக்கெட் தொடர் ஐந்து அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று அணிகள் தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகள் ஜிம்பாப்வே அணிகள்.
இந்தத் தொடரில் நடந்த குவாலிஃபையர் போட்டியில் டர்பன் களந்தர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ் ஆகிய இரண்டு தென்ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் ஜோபர்க் பஃபல்லோஸ் அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
Trending
அதன்படி களமிறங்கிய டர்பன் களந்தர்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளட்சர் 39, ஆசிஃப் அலி 32 , நிக் வெல்ச் 24 ஆகியோர் அதிரடியாக ரன்கள் எடுக்க பத்து ஓவர்கள் முடிவில், டர்பன் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் அதிரடியாகச் சேர்த்தது. ஜோபர்க் அணி தரப்பில் நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோபர்க் பஃபல்லோஸ் அணிக்கு கேப்டன் முகமது ஹபீஸ் 17, டாம் பாண்டன் 4, வில் ஸ்மீத் 16, ரவி போபரா 1, முஷ்பிகுர் ரஹீம் 14*என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.
ஆனால் இன்னொரு முனையில் நங்கூரம் இட்டு நின்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுஃப் பதான் அதிரடியில் தற்போது விளையாடும் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். அவர் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாமே பவுண்டரி எல்லைக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன.
முடிவில் 9.5 ஓவர்களில் ஜோபர்க் பபல்லோஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் நின்ற யூசுஃப் பதான் 26 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதிலும், இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் வீசிய ஒரு ஓவரில் 6,6,6,2,4 என 26 ரன்கள் எடுத்து மிரட்டினார். இந்நிலையில் யூசுஃப் பதான் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now