
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்த்னர். அத்துடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த செதிகுல்லா அடல் சர்வதேசா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்துல் மாலிக் 11 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 84 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.