
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ரஸா 61 ரன்களையும், கிரேய்க் எர்வின் 75 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் அதிரடியாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 49 ரன்களையும் சேர்த்து அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலைப்பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணியில் மீண்டும் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பினர்.
அதேசமயம் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மத் ஷா தனது சதத்தைப் பதிவ்ய்செய்து அசத்தினார். இப்போட்டியில் 14 பவுண்டரிகளுடன் 139 ரன்களைச் சேர்த்திருந்த ரஹ்மத் ஷா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த இஸ்மத் ஆலமும் சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 363 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸிங் முஸரபானி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.