
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பாயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.அதன்பின் அபிஷேக்குடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார்.
இதன்மூலம் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த அபிஷேக் சர்மா அதன்பின், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் இந்திய அணிகாக அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே சதமடித்த வீரர் எனும் சாதனைகளைப் படைத்தும் அசத்தினார். மேற்கொண்டு அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வார்ட் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.