
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் பந்திலேயே அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் கணக்கை தொடங்கினார். அதன்பின் 12 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மாவும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் 13 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 40 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் சிக்ஸர்களை பறக்கவிட்ட அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ரியான் பராக் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.