
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாதனை வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 100 ரன்களில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும், ரிங்கு சிங் 48 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.