ZIM vs NED, 1st ODI: தேஜா நிடமானுரு சதத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று நடைபெற்றது. ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இத்தொடர் உலகக்கோப்பை குவாலிஃபையர் லீக் போட்டிகளாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கிரேக் எர்வின், கேரி பேலன்ஸ், இன்னசெண்ட் கையா, வெஸ்லி மதெவேரெ, சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். இதையடுத்து வந்த கிளைவ் மடாண்டே மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 74 ரன்களில் மடாண்டேவும் விக்கெட்டை இழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த மஸகட்ஸா 34, ரிச்சர்ட் ங்காரவா 35 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
Trending
இதனால் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வே அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபிரெட் கிளாசென் 3 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜிட் சிங் 8 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 20 ரன்களிலும், டாம் கூப்பர் ஒரு ரன்னிலும், முசா அஹ்மத் ரன் ஏதுமின்றியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த காலின் அக்கர்மேன் - தேஜா நிடமானுரு இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அச்த்தினர். அதன்பின் 50 ரன்களை எடுத்த கையோடு காலின் அக்கர்மேன் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேஜா நிடமானுரு தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக ஷாரிஸ் அகமதும் சிறப்பாக விளையாடி 30 ரன்களைச் சேர்த்து உதவினார். அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தேஜா நிடமானுரு 110 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 49.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேஜா நிடமானுரு ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now