
Keshav Maharaj: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையை கேஷவ் மஹாராஜ் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 153 ரன்களையும், கார்பின் போஷ் 100 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களையும் சேர்க்க முதல் இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் அனுபவ வீரர் சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 137 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 251 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானாலும் ஃபாலோ ஆனைத் தவிர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், கோடி யூசுஃப் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.