
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இதனையடுத்து ஜிம்பாப்வே அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ‘
அந்தவகையில் வரும் ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபெஸ்டில் நடைபெறும் இப்போட்டியானது ஜூலை 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், ஜெய்லார்ட் கும்பி, பிளெஸ்ஸிங் முசரபானி, பிரையன் பென்னட், தியான் மேயர்ஸ், ஜானதன் காம்பெல், சீன் வில்லியம்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சிக்கந்தர் ரஸா, ரியான் பார்ல் உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜிம்பாப்வே அணி இந்தண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.