
Sri Lanka Tour Of Zimbabwe: ஜிம்பாப்வே அணியானது எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடருக்கு முன்னதாக இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி தற்சமயம் வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த அணி வங்கதேசத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநால் தொடர் ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு பிறகு இலங்கை அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் 03ஆம் தேதி முதலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.