
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று புலவாயோவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் - கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பீட்டர் மூர் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கர்டிஸ் காம்பெர் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 9 ரன்களுக்கும், ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும், நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கெட் தனது பங்கிற்கு 33 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களைச் சேத்திருந்த மார்க் அதிர் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பேரி மெக்கர்தி, கிரெய்க் யங், மேத்யூ ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.