டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. முதல் விக்கெட்டுக்கு கவாஜா மற்றும் வார்னர் இருவரும் 50 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 15 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் உள்ளே வந்த லபுஜானே 18 ரன்கள் அடித்திருந்தபோது அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ டபிள்யூ ஆகி வெளியேறினார்.
அஸ்வினின் அதே ஓவரில் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, உணவு இடைவேளைக்கு முன்பு வரை 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி சற்று தடுமாறியது. கவாஜா அரைசதம் மற்றும் டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னுடன் களத்தில் நின்றனர்.
உணவு விடுவிகளுக்கு பின்பு வந்த டிராவிஸ் ஹெட் 12 ரன்கள் ஆட்டம் இழந்தார். மிகச் சிறப்பாக விளையாடிவந்த தொடக்க வீரர் கவாஜா 81 ரன்கள் இருந்தபோது, ஜடேஜாவின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தார். ஸ்கொயர் திசையில் நின்ற கேஎல் ராகுல் அதை பாய்ந்து பிடித்து அசத்தினார். அடுத்ததாக உள்ளே வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் வந்த பாட் கம்மின்ஸ் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.