இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த விஹாரி - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் விஹாரி அரைசதம் கடக்க, விராட் கோலி45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதற்கிடையில் விஹாரி 58 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜடேஜா ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்தார்.
அதன்பின் எம்பில்தெனியா வீசிய 76ஆவது ஓவரில் ரிஷப் பந்த் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் சந்திந்த அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசி ராக்கெட் வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் ரிஷப் பந்த் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் கிளீன் போல்டாகி 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் மீண்டும் ஒருமுறை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.