
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 1999ஆம் ஆண்டு இருண்ட காலம். அஸாரூதீன், அஜய் ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை எங்கு சென்றாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்திய அணி மீதான சூதாட்ட புகாரால் அப்போதைய பயிற்சியாளர் கபில் தேவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதாளத்தை நோக்கி செல்கிறது என்ற விமர்சனங்கள் பட்டித்தொட்டி எல்லாம் எழத்தொடங்கியது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு 'கல்கத்தாவின் இளவரசன்' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியிடம் வந்தது. இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும், இந்திய கிரிக்கெட்டின் ஆட்ட முறையை மாற்ற வேண்டும், எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை யாரும் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும் என நினைத்து கேப்டன் பதவிக்கு வந்த கங்குலிக்கு சூதாட்ட புகார்கள் மிகப்பெரிய ஏமாற்றம்.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு போட்டியாக ஆக்ரோஷத்திலும், பேட்டிங்கிலும் அசத்திய கங்குலிக்கு, இந்திய கிரிக்கெட்டை மீட்க கேப்டன்சி என்னும் ஆயுதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கையில் கொடுத்தது. இருப்பினும் அந்த சமயத்தில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்தது. சச்சின், டிராவிட், லக்ஷ்மண், கும்ப்ளே, ஸ்ரீநாத் என சிறந்த வீரர்கள் இருந்தாலும் சொந்த நாட்டிலேயே தோல்வியை தான் சந்தித்துகொண்டிருந்தது.