
இதுநாள் வரை 140 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க, கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை விட 60 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை. சிக்ஸர்கள் சாதனையும் கெயிலிடம்தான் இருக்கிறது.
சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் அவர்கள் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்பதைக் கடந்தும் ஒரு ரசிகர்கூட்டம் இருக்கும். அதனால்தான் கெயிலை ‘யூனிவர்சல் பாஸ்’ என்கிறார்கள். சில வீரர்களுக்கு மட்டும் கிரிக்கெட் என்பது இயற்கையாகவே வாய்க்கும். அவர்கள் எந்தவொரு பயிற்சியும் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அந்த நாள் அவர்களுடைய நாள் ஆவதற்கு சில நிமிடங்கள் போதுமானதாக இருக்கும்.
பவர்ஃபுல் ஹிட்டர் என்றதும் சில வீரர்களின் அதிரடி ஆட்டம் நமக்கு நினைவுக்கு வரலாம். அப்படிப்பட்ட வீரர்கள் ஒரு நாள் போட்டிகளின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். குறைந்த பட்சம் டி20 போட்டியின் முதல் பந்தையேனும் பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், டெஸ்ட் போட்டியின் முதல் பந்தை சிக்ஸுக்கு அனுப்பும் லாவகம் எல்லாம் ஒருவருக்கு மட்டுமே அப்போது வாய்த்திருந்தது. அவர் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில்.