உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
இதில் பங்கேற்று விளையாடும் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டத்தை வெல்லும் நோக்கில் இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் ஆசிய அணிகளுக்கு சாதகம் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பட்டம் வெல்லும் ஃபேவரைட் அணிகளில் கிரிக்கெட் வல்லுநர்கள் பார்க்கும் அணியாக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் உள்ளது.
Trending
பாகிஸ்தான் அணியின் பலம்
பாகிஸ்தான் அணியின் முதன்மையான பலமாக பார்க்கப்படுவது அவர்களின் வேகப்பந்து வீச்சு தான். ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஷ் ராஃப், ஹசன் அலி மற்றும் முகமது வாசீம் ஜூனியர் ஆகிய, உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தொடர்ந்து திணறடித்து வருகின்றனர். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோர், 150 கிலோ மீட்டர் வேகத்தில் லைன் அண்ட் லெந்தில் துல்லியமாக பந்துவீசுவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதனால், சர்வதேச போட்டிகள் அவர்கள் தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி அணியில் இடம்பெற்று இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. பேட்டிங்கிலும் பாபர் அசாம், ஃபகார் ஜமான் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். அவர்களுடன் மிடில் ஆர்டரில் முகமது ரிஸ்வான், அகா சல்மான், இஃப்திகார் அஹ்மத் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது,
பாகிஸ்தான் அணியின் பலவீனம்
பாகிஸ்தான் அணியின் பெரிய பலவீனம் கடந்த ஆசியக்கோப்பை தொடரில் வெளிப்பட்டது. பாகிஸ்தான் முன்கள வீரர்கள் யாரும் அந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இமாம் உல் - ஹக், பாபர் அசாம் மற்றும் ஃபகார் ஜமான் உள்ளிட்டோரும், தொடர்ந்து ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதோடு, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சும் அவர்களின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுகிறது. அணியில் இடம்பெற்றுள்ள ஒரே சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் கூட, அண்மை காலமாக பெரிதாக சோபிக்கவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயித்தபோதும் கூட பாகிஸ்தான் அணி தோல்வியையே தழுவியது. இந்திய மைதானங்களை உணர்ந்து செயல்படும், சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததே இதற்கு காரணமாகும். போதிய அனுபவமில்லாத அணியாக இருப்பதும் பாகிஸ்தானின் பலவீனமாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணியில், ஒன்பது வீரர்கள் முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட உள்ளனர். சவுத் ஷகீல், ஆகா சல்மான், முகமது வாசிம் மற்றும் உசாமா மிர் போன்ற வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் சமீபத்திய போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை பயணம்
- 1975: லீக் சுற்று
- 1979: அரையிறுதி சுற்று
- 1983: அரையிறுதி சுற்று
- 1987: அரையிறுதி சுற்று
- 1992: சாம்பியன்
- 1996: காலிறுதி சுற்று
- 1999: இரண்டாம் இடம்
- 2003: லீக் சுற்று
- 2007: லீக் சுற்று
- 2011: அரையிறுதி சுற்று
- 2015: காலிறுதி சுற்று
- 2019: லீக் சுற்று
உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஸமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர்.
பாகிஸ்தான் போட்டி அட்டவணை
- அக்டோபர் 6 - பாகிஸ்தான் vs நெதர்லாந்து, ஹைதராபாத்
- அக்டோபர் 10 - பாகிஸ்தான் vs இலங்கை, ஹைதராபாத்
- அக்டோபர் 14 - பாகிஸ்தான் vs இந்தியா, அஹ்மதாபாத்
- அக்டோபர் 20 - பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, பெங்களூரு
- அக்டோபர் 23 - பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான், சென்னை
- அக்டோபர் 27 - பாகிஸ்தான் vs தென் ஆப்ரிக்கா, சென்னை
- அக்டோபர் 31 - பாகிஸ்தான் vs வங்கதேசம், கொல்கத்தா
- நவம்பர் 4 - பாகிஸ்தான் vs நியூசிலாந்து, பெங்களூரு
- நவம்பர் 11 -பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கொல்கத்தா
Win Big, Make Your Cricket Tales Now