
இந்தியா போன்ற நாட்டில் ஒரே ஒரு கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடிவிட்டால், அவர் நேஷனல் ஹீரோ. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் இந்திய அணி தோற்றால் கிரிக்கெட் ரசிகர்களின் முதன்மையான வில்லன் அவர். இந்திய அணிக்காக ஆறாவது இடத்தில் களமிறங்கும் இந்த வில்லனுக்கு ரசிகர்கள் அதிகம். ஃபினிஷிங் ரோலில் களமிறங்குபவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றால், ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும். அதே ஆறாவது இடத்தில் களமிறங்கி இந்திய அணி தோல்வியடைந்தால், அந்த ஒற்றை நபரே தோல்விக்குக் காரணம் என்று அதே ஊர் முத்திரை குத்தும்.
இதையெல்லாம் தெரிந்தே தான் மகேந்திர சிங் தோனி அப்போறுப்பை ஏற்றுக் கொண்டார். கேப்டனாக இருந்து கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோனி களமிறங்கி விளையாடி இருக்கலாம். ஆனால் போரில் நிற்கும் தலைவனுக்கு வெற்றி தான் முக்கியமே தவிர்த்து வேறு எதுவும் தேவையில்லை. தோனி எப்போதும் வெற்றிக்காகவே ஓடினார். அவரைப் போன்று தன் மேல் நம்பிக்கை கொண்ட வீரரை வேறு எந்த விளையாட்டிலும் பார்க்கவே முடியாது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்றாலும், தோனி நம்பிக்கையை மட்டும் கைவிட்டதே இல்லை.
திறமைகள் அதிகம் இருந்தாலும், தன் மேல் இருக்கும் நம்பிக்கையால் மட்டுமே தோனி உருவாகியுள்ளார். கிரிக்கெட் வீரர் என்பவர் சூழலுக்கு தகுந்தது போல் ஆட வேண்டும். அதில் தோனி எப்போதும் கில்லி தான். அப்படி விளையாடிய 10இல் 9 போட்டியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர் தோனி. அதேபோல் தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொள்ள தோனி எப்போதும் தவறியதே இல்லை. கேப்டன் ஆனதில் இருந்து 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் என பேச்சு எடுத்தால் ஜொஹிந்தர் ஷர்மாவை நினைவில் கொண்டு வந்தது, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை சிக்சர், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கொப்பையில் இஷாந்த் ஷர்மாவை 18ஆவது ஓவர் வீச வைத்தது, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தியது என, பல வெற்றிகளுக்கு முழுக்க முழுக்க தோனியே காரணம் என பலரையும் நம்ப வைத்துள்ளார்.