Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை!

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் காணலாம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 10, 2024 • 19:49 PM
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை! (Image Source: Cricketnmore)
Advertisement

ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. 

அந்தவரிசையில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் இத்தொடரில் அதிகரித்துள்ளன. ஏனெனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருவதால், அந்த அணியின் மீது கூடுதல் கவனம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதன்படி நடப்பு சீசனில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

Trending


சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை 5 முறை கோப்பையை வென்று, அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணி எனும் சாதனையை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சூதாட்ட சர்ச்சை காரணமாக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விளையாட சிஎஸ்கே அணிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் 2018ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றதுடன், அந்த சீசனில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி எனும் சாதனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் உள்ளது. மேலும் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இந்த ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

சிஎஸ்கே அணியின் பலம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான பலமிக்க அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை ரூ.1.80 கோடிக்கும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும், நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கும் வாங்கியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வலிமையாக இருந்ததாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலான போட்டிகளில் ஷிவம் தூபேவை தவிற மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். 

அந்தவரிசையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அச்சத்திவரும் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரது வருகை சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை மேலும் வலிமைபடுத்தியுள்ளது. மறுபக்கம் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் மதீஷா பதிரானா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அவருடன் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டெ, முகேஷ் சௌத்ரி, முஸ்தஃபீசூர் ரஹ்மான் போன்ற வீரர்களும் இருப்பது அணி பந்துவீச்சு யுனிட்டை வலிமைப்படுத்தியுள்ளது. 

அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்‌ஷனா, மொயீன் அலி, மிட்செல் சாண்ட்னர் போன்ற உலக்கத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஷிவம் தூபேவிற்கு இந்த சீசனில் பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அணியின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனுக்கான சிஎஸ்கே அணியில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், எம் எஸ் தோனி, அஜிங்கியா ரஹானே, சமீர் ரிஸ்வி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்களில் பெரும்பாலானோர் ஆல் ரவுண்டர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். 

அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் என்ற பேச்சுகளும் அடிப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சீசனைப் போலவே இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கான உற்ச்சாகமும், ஆரவாரமும் ரசிகர்கள் மத்தில் அனைத்து மைதானங்களிலும் இருக்கும் என்பது அணிக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய போட்டிகளில் சென்னை மட்டுமின்றி மற்ற அணிகளின் மைதானங்களிலும் சிஎஸ்கேவிற்கான ரசிகர்கள் அதிகளவு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிஎஸ்கே அணியின் பலவீனம்

இந்தண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டாலும், அணியில் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இதில் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் பெரும் குழப்பத்தை வரவழைக்கும் என்பது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசனில் கூட நட்சத்திர வீரர் மிட்செல் சாண்ட்னருக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோக அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவு காரணமாக மே மாதம் வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் டெவான் கான்வே - ருதுராஜ் கெய்வாட் இணை ஐபிஎல் தொடரின் சிறந்த தொடக்க வீரர்களாக பார்க்கப்படும் நிலையில், தற்போது டெவான் கான்வே முதல் சில போட்டிகளில் விளையாடமுடியாதது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம் சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுபோக, வேகப்பந்து வீச்சை எடுத்துகொண்டால் மதீஷா பதிரானா, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், ரன்களை கட்டுப்படுத்த தவறியுள்ளதும் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதை மறந்துவிட முடியாது. 

சிஎஸ்கே ஐபிஎல் வரலாறு

  • 2008 - இரண்டாம் இடம் (ரன்னர் அப்)
  • 2009 - பிளே ஆஃப் சுற்று 
  • 2010 - சாம்பியன்
  • 2011 - சாம்பியன்
  • 2012 - இரண்டாம் இடம்
  • 2013 - இரண்டாம் இடம்
  • 2014 - பிளே ஆஃப் சுற்று
  • 2015 - இரண்டாம் இடாம்
  • 2016 - இடைநிக்கம்
  • 2017 - இடைநிக்கம்
  • 2018 - சாம்பியன்
  • 2019 - இரண்டாம் இடம் 
  • 2020 - லீக் சுற்று
  • 2021 - சாம்பியன்
  • 2022 - லீக் சுற்று
  • 2023 - சாம்பியன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மகேந்திர சிங் தோனி(கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரகானே, ஷேக் ரஷீத், சமீர் ரிஸ்வி, டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், மொயின் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல், ராஜ்யவர்தன் ஹங்கர்கேகர், தீபக் சகர், மதிஷா தீக்ஷனா, மதிஷா பதிரனா, முகேஷ் சௌத்திரி, முஸ்தஃபிஸூர் ரஹ்மான், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர், அவினாஷ் ராவ் ஆரவலி.

சிஎஸ்கே போட்டி அட்டவணை

இந்தியாவில் நடப்பு ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மார்ச் 22 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சேப்பாக்கம்
  • மார்ச் 26 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - சேப்பாக்கம்
  • மார்ச் 31 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - விசாகப்பட்டினம்
  • ஏப்ரல் 05 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
     


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement