ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலிடம் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா!
ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 0–5 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது.
இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகளுக்கான ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏழாவது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பிரேசில் அணிகள் மோதின.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரசேில் அணிக்கு கேபி ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்திலும், அலைன் ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0–2 என பின்தங்கி இருந்தது.
அதன்பின் தொடங்கிய இரண்டாவது பாதியிலும் அசத்திய பிரேசில் அணிக்கு அலைன் ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதன்பின் அந்த அணியின் லாரா சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்திம் 86ஆவது மற்றும் கூடுதல் நேரமான 90+3ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்தார்.
ஆனால் இப்போட்டியில் கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 0–5 என்ற கணக்கில் பிரேசிலிடம் வீழ்ந்ததுடன் ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்தது. ஏற்கனவே அமெரிக்கா, மொராக்கோ அணிகளிடம் வீழ்ந்த இந்திய அணி, தொடர்ந்து 3ஆவது தோல்வியை பெற்று பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது.
கோவாவில் நடந்த மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அமெரிக்க அணி 5–0 என, மொராக்கோ அணியை வென்றது. அதன்பின் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஜெர்மனி 3–1 என, நியூசிலாந்தையும், நைஜீரியா 2–1 என, சிலியையும் வென்றது.
இத்தொடரின் ‘பி’ பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஜெர்மனி (9 புள்ளிகள்) மற்றும் நைஜீரியா (6 புள்ளிகள்) காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now