பாக்ஸிங் டே டெஸ்ட்: ரன் குவிப்பில் ஆஃப்கானிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!

Updated: Sun, Dec 29 2024 20:59 IST
Image Source: Google

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.  அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பையும் உடைக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர் தடுமாறினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடி வரும் ரஹ்மத் ஷா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 425 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ரஹ்மத் ஷா 231 ரன்களுடனும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 141 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் ரஹ்மத் ஷா 23 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 234 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷாஹிதியுடன் இணைந்த அஃப்சர் ஸஸாயும் ரன்களைச் சேர்க்க ஆஃப்கானிஸ்தான் அணியும் 500 ரன்களைத் தாண்டியது. இதில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 179 ரன்களையும், அஃப்சர் ஸஸாய் 46 ரன்களையும் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிப்படைந்தது. இதனால் நான்காம் நாள் ஆட்டமானது முன்கூடியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன் அடிப்படையில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 513 ரன்களைக் குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளஸ்ஸிங் முஸரபானி, டிரேவர் குவாண்டு மற்றும் நியூமன் நியாம்ஹுரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 71 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. இதனால் இப்போட்டியானது டிராவில் முடிவடையும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை