தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷான் மசூத் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சைம் அயூப்பும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாமும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த காம்ரன் குலாம் மற்றும் சௌத் ஷகீல் இணை அணியின் ஸ்கோரை உயார்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய ஷகில் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் அரைசதம் கடந்து அசத்திய காம்ரன் குலாமும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் முகமது ரிஸ்வான் 27 ரன்களையும், அமீர் ஜமால் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளையும், கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்து வந்த நிலையில், மறுமுனையில் டோனி டி ஸோர்ஸி 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஐடன் மார்க்ரம் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்களையும், மறுபக்கம் கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் குர்ராம் ஷஷாத் 2 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 129 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News