ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 

Advertisement

அணியின் தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே 3 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதைனைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் க்ரீன் 8 ரன்களுக்கும், கடந்து போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து கீமர் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 65 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களுடன் நடையைக் கட்டினார். மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜா 75 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸும் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார்.

ஆனால் மறுமுனையில் நாதன் 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் பாட் கம்மின்ஸ் ஆட்டமிழக்காமல் 64 ரன்களைச் சேர்த்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதன்மூலம் 22 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் தொடக்க வீரர் சந்தர்பால் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இரண்டாம் நால் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கிரேய்க் பிராத்வைட் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதனைத்தொடர்ந்து 35 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News