IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற இருந்த இப்போட்டியின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் தொடர் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியானாது மீண்டும் நடைபெறுமா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது. இந்நிலையில் இன்றைய தினம் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.
இதில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய் லிட்டன் தாஸ் 11 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 09 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். அதேசமயம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்களில் மெஹிதி ஹசன் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்ஸர்களை விளாசித் தொடங்கிய இருவரும் வெறும் 3 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 50 ரன்களுக்கு கொண்டு சென்று புதிய வரலாறு படைத்தனர்.
இப்போட்டியில் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களை எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்து 39 ரன்களில் ஷுப்மன் கில்லும், 9 ரன்களிலும் ரிஷப் பந்தும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - கேஎல் ராகுல் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்த கேஎல் ராகுலும் 68 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 26 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 26 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.