4,0,6,0,6,6,4 - முகேஷ் சௌத்ரியை பந்தாடிய அபிஷேக் சர்மா - வைரலாகும் காணொளி!
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. இதையடுத்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 12, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 35 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்க்க, இறுதியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களும் விளாசி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலன் திரும்பினார்.
அதிலும் குறிப்பாக இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை முகேஷ் சௌத்ரி வீச, அதனை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் இரண்டாவது ஓவரிலேயே அந்த அணி 35 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் முகேஷ் சௌத்ரி ஓவரில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.