ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியின் டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர. பின் நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.  இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்  9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை நிதீஷ் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களில் ஆல் அவுட்டானது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 105 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாம் கொன்ஸ்டாஸ் 8 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 20 ரன்களிலும் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய  ஸ்டீவ் ஸ்மித் 13 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னிலும், மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், அலெக்ஸ் கேரி 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் லபுஷாக்னேவுடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தர். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய லபுஷாக்னேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. பின் 70 ரன்களை எடுத்திருந்த லபுஷாக்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க்கும் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த நாதன் லையன் மற்றும் ஸ்காட் போலண்ட் இணை விக்கெட்டை இழக்காமல் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர். அத்துடன் நிற்காத இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களைக் குவித்தது. இதில் நாதன் லையன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 333 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News