ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!

Updated: Thu, Apr 04 2024 20:29 IST
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் அதிர், இலங்கை அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மார்க் அதிர் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அதேபோல் இலங்கை அணியைச் சேர்ந்த அல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியதோடு, பந்துவீச்சிலும் குறிப்பிட தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். மேலும் இப்பட்டியலில் இடம்பிடித்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

மேலும் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆல் ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர், இங்கிலாந்து மகளிர் அணி பேட்ஸ்மேனான மையா பௌச்சர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை