ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

Advertisement

அந்த அணியின் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான், முகமது இஷாக், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஃப்கான் அணி 14 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன்பின் இணைந்த செதிகுல்லா அடல் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட செதிகுல்லா அடல் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அனுபவ வீரர் முகமது நபி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஜாஸ் அஹ்மத் 4 ரன்களுக்கு ஆட்டமிழாந்தனர். 

பின்னர் களமிறங்கி அதிரடி காட்டிய ரஷித் கானும் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, நவீன் உல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷுவா லிட்டில் மற்றும் பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்டி பால்பிர்னியும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கரெத் டெலானி அதிரடியாக விளையடை 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் கேப்டன் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News