இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.  

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியிலிருந்து தனிபட்ட காரணங்களினால் விராட் கோலி விலகினார், ஆனால் அவருடைய விலகலுக்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஒரு தரப்பில் விராட் கோலியின் தாயாருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாகவும், அதன் காரணமாக விராட் கோலி தொடரிலிருந்து விலகினார் என்று கூறினர். ஆனால் அதனை மறுத்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

Advertisement

அதன்பின், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியதாகவும் விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான ஏபிடி வில்லியர்ஸ் அறிவித்தார். ஆனால் ஒருசில தினங்களிலேயே அவர் விராட் கோலி குறித்து தவறான தகவலை வழங்கிவிட்டேன் என்று மன்னிப்பு கோரினார். இதனால் விராட் கோலியின் விலகலுக்கான உண்மை காரணம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 

இந்நிலையில் தான் விராட் கோலி தான் மீண்டும் தந்தையாகியுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவுசெய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது பதிவில், "இதயம் நிறைந்த அன்போடும் அளவுகடந்த மகிழ்ச்சியோடும் நாங்கள் இதை அறிவிக்கிறோம். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி எங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தியை உங்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் செல்ல மகன் அகாய்(Akaay), அதாவது வமிகாவின் சகோதரனை இந்த உலகிற்கு அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் வாழ்வின் இந்த அழகான தருணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம். அதேநேரத்தில் எங்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவுசெய்துள்ளார்.  மகன் பிறந்திருப்பதாக அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News