ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி  டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்றது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 4 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக தொடங்கிய கைல் மேயர்ஸும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ரோவ்மன் பாவெல் 21 ரன்களோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸ் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - ஆண்ட்ரே ரஸல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூதர்ஃபோர்ட் ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசியதுடன் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். 

அவரைத்தொடர்ந்து சிக்சர்களாக விளாசித் தள்ளிய ஆண்ட்ரே ரஸல் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் ஆடம் ஸாம்பா வீசிய 19ஆவது ஓவரை எதிர்கொண்ட ஆண்ட்ரே ரஸல் அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 28 ரன்களை விளாசி அரங்கத்தை அதிரவைத்தார். மேலும் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 239 ரன்களைச் சேர்த்தனர்.

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 71 ரன்களையும், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரர் ஸேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மிட்செல் மார்ஷ் 17 ரன்களில் நடையைக் கட்ட, மறுபக்கம் பவுண்டரியும் சிக்சகளுமாக விளாசிய டேவிட் வார்னர் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 16 ரன்களிலும், ஜோஷ் இங்லிஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்ட இழக்க, இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரெலிய அணி 117 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதையடுத்து கடந்த போட்டியில் சதமடித்து அணியின் வேற்றிக்கு காரணமாக இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் இந்த இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிம் டேவிட் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையிலும், ஆஸ்திரேலிய அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News