டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது. இதில், மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் குவித்தார். இதே போன்று டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 270 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணிக்கு ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தாது. ஆனால் இறுதியில் இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா சென்னையில் அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் சேர்த்து 50ஆவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு, சென்னையில் மட்டும் இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.