இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 20) நடைபெற்றது. 

Advertisement

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய நிலையில், மறுமுனையில் ஜார்ஜியா வோல் 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு 25 ரன்களுக்கும், எல்லிஸ் பெர்ரி 7 ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் தஹ்லியா மெக்ராத் 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்த கையோடு பெத் மூனியும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீராங்கனைகள் மையா பௌச்சர் மற்றும் டேனியல் வைட் ஹாட்ஜ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சோஃபியா டங்க்லி மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஓரளவு தாக்குப்பிடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் நாட் ஸ்கைவர் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சோஃபியா டங்க்லி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு, 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறக்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News