ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் சோபிக்க தவறினர். அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கிய செதிகுல்லா அடல் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைக் குவித்தார். 

Advertisement

இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியானது 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிரடியாக விளையாடியதுடன் தனது பேட்டிங்கில் இமாலய சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக அவர் விளாசிய இரண்டு சிக்ஸர்கள் 100 மீட்டர்களைத் தாண்டிச் சென்றது. அதன்படி இன்னிங்ஸின் 47ஆவது ஓவரை ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் வீசிய நிலையில், அந்த ஓவரை ஒமர்ஸாய் எதிர்கொண்டார். 

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஒமர்ஸாய் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பேக் ஆஃப் லெந்த் பந்தை பந்துவீச்சாளர் தலைக்கு மேல் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார். ஒமர்ஸாய் விளாசிய அந்த சிக்சரானது 103 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதனைக் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்நிலையில் ஒமர்ஸாய் விளாசிய இந்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.

Advertisement

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி,கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News