ரோஹித், கோலி சாதனையை சமன்செய்தார் பாபர் ஆசாம்!

Updated: Fri, Dec 27 2024 12:18 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தா அணியில் காம்ரன் குலாம் அரைசதம்  கடந்த நிலையில் மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாஅமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஐடன் மார்க்ரம் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்களையும், மறுபக்கம் கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 4 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இப்போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை சமன்செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

அதன்படி இப்போட்டியில் அவர் மூன்று ரன்களைக் கடந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவங்களிலும் 4000 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதேசமயம் பாபர் ஆசாம் ஒருநாள் போட்டிகளில் 5,957 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 4,223 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4001 ரன்களையும் எடுத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இது தவிர, பாபர் ஆசாம் இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த பாகிஸ்தானின் 12ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த அணியைச் சேர்ந்த யூனிஸ் கான், ஜாவேத் மியான்தத், இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப், அசார் அலி, சலீம் மாலிக், மிஸ்பா உல் ஹக், ஜாகீர் அப்பாஸ், அசாத் ஷபிக், முதாசர் நாசர் மற்றும் சயீத் அன்வர் ஆகியோருடன் பாபர் ஆசாமும் இணைந்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை