கோலி, ஆம்லாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) பார்லில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கும். மறுபக்க டி20 தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகியும் வருகின்றனர். மேலும் பணிச்சுமை காரணமாக இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடன் மார்க்ரம் அணியை வழிநடத்தவுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் பாபர் ஆசாம் மேற்கொண்டு 191 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 120 போட்டிகளில் விளையாடி 117 இன்னிங்ஸ்களில் 56.95 சராசரியில் 5809 ரன்கள் எடுத்துள்ளார். ஒருவேளை இத்தொடரில் பாபர் ஆசாம் இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஹாஅசிம் அம்லாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லா 123 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வாய்ப்பை பாபார் ஆசாம் பெற்றுள்ளார். இது தவிர, இத்தொடரில் பாபர் ஆசாம் சதமடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் அணியில் கூட்டாக முதலிடம் பெறுவார். இதுவரை பாபர் ஆசாம் 19 சதங்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் முன்னாள் வீரர் சயீத் அன்வர் 20 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இந்தத் தொடரில் பாபர் ஆசாம் சதமடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 20 சதங்கள் அடித்ததன் அடிப்படையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். விராட் கோலி 133 இன்னிங்ஸ்களில் 20 ஒருநாள் சதங்களை பூர்த்தி செய்து இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா 111 போட்டிகளில் 20 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.